”பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?” – வைரமுத்து பதில்
Saturday, November 17, 2012
கேள்வி: ”பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?”
வைரமுத்து பதில்: ”நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
பாரதிராஜா – இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.
இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?
வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?”
-விகடன் மேடையில் வாசகர் கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில்!
0 comments:
கருத்துரையிடுக