10 மணி நேரம் பால்தாக்கரே இறுதி ஊர்வலம்- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்!
Sunday, November 18, 2012 at 8:38 PM
மும்பை: மும்பையில் நேற்று காலமான சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னதாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பால்தாக்கரேவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
உடல்நலக் குறைவால் காலமான பால்தாக்கரேவின் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சிவாஜிபூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாஜிபூங்கா வரை சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பால்தாக்கரேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். இதனால் மாலை 5 மணிக்குத்தான் சிவாஜிபூங்காவை அடைய முடிந்தது. வழியில் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனில் சிறிது நேரம் பால்தாக்கரேவின் உடல் வைக்கப்பட்டது
மும்பை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றாக முடங்கியது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கவில்லை. திரும்பிய இடங்களிலெல்லாம் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.
திரை உலகப் பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் குவிந்தனர். மும்பை நகரில் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சிவாஜி பூங்காவில் மாலை 6 மணி அளவில் முழுமையான அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பால்தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பெல்காமில் பந்த்
இதனிடையே மகராஷ்டிரா மாநில எல்லையான கர்நாடகத்தின் பெல்காம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது,
கர்நாடக மாநிலத்தின் ஒருபகுதியாக பெல்காம் இருந்தாலும் பால்தாக்கரே போன்றவர்கள் மகராஷ்டிராவுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். இந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில் பால்தாக்கரே மறைவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பால் அங்கு பதற்றம் நிலவியது.
0 comments:
கருத்துரையிடுக